தலைப்புச் செய்திகள்

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (06) தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்; 2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது, கொடுப்பனவுகளுக்காக போராடுவது நியாயமானதல்ல என்றார்.

”2027 ஆம் ஆண்டு மூன்றாவது சம்பள அதிகரிபுக்காக, அரசாங்கம் ரூ. 330 பில்லியன் செலவிட வேண்டியிருக்கும். 2025 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பிற்கு ரூ. 110 பில்லியனும், 2026 ஆம் ஆண்டு ரூ. 220 பில்லியனும் செலவிடப்பட்டது” எனவும்அவர் கூறினார்.

சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதியை வழங்கிய பின்னர், பட்ஜெட்டில் அதிகரிப்பின் தாக்கத்தை மதிப்பிட்ட பிறகு, வேறு ஏதேனும் கொடுப்பனவுகளை வழங்குவதா என்பதை, அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தாலும், சில கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு, சில தொழிற்சங்கங்கள் கோருகின்றன; அது நடக்காது. சம்பள உயர்வின் மூன்றாவது பகுதியை வழங்கிய பின்னரே, பட்ஜெட்டில் அதிகரிப்பின் தாக்கத்தை மதிப்பிட்ட பின்னரே வேறு எந்த கொடுப்பனவுகளையும் நாங்கள் பரிசீலிப்போம்”.

”2027 ஜனவரியில் சம்பள உயர்வு நிலுவையில் இருக்கும்போது கொடுப்பனவுகளுக்காகப் போராடுவது நியாயமில்லை’” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.