தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிரான மனு ஆய்வு நிறைவு: உரிய நேரத்தில் நீதிமன்றம் அறிவிக்கும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை ரத்துச் செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மறுஆய்வை உச்ச நீதிமன்றம் முடித்துள்ளது.

அதன்படி, உச்ச நீதிமன்றம் – தனது முடிவை உரிய நேரத்தில் சபாநாயகருக்கு முறையாகத் தெரிவிக்கும் என்று அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மேற்படி எதிர் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலத்திலுள்ள பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதை தீர்மானிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சட்டமூலம் இயற்றப்பட வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, பொது அபிப்பிராய வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு – மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை கோரினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களை ஒழிக்கும் சட்டமூலம் ஜனவரி 7ஆம் திகதி – நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டொக்டர் ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலத்தை எதிர்த்து மனுக்களை தாக்கல் செய்ய – அன்றிலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.

சட்டமூலம் இயற்றப்பட்டதும், 512 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமைகள் ரத்து செய்யப்படும்.