
களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ராஜவத்தே சத்துவ என்று அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றம் தொடர்பாக டிசம்பர் 13 ஆம் திகதி களுத்துறை தெற்கு பொலிஸார் இவரை கைது செய்தனர் என்றும், பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் இவர் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
டிசம்பர் 29 ஆம் திகதி தடுப்புக் காவலில் இருந்தபோது சிறைக் கைதிகள் குழுவால் அந்த நபர் தாக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையின் 14 ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் கால்கள் கட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே காலை 6:00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் ரிவால்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு – அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


