தலைப்புச் செய்திகள்

காஸாவுக்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுக்கிறது: UNRWA குற்றச்சாட்டு

காஸாவுக்குள் மனிதாபிமான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை, இஸ்ரேல் தடுத்து வருவதாக, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.

மேலும் உதவிப் பொருட்கள் மீதான இந்தத் தடையை நீக்குமாறும், அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் மனிதாபிமான பொருட்களான உணவு, சுகாதாரப் பொருட்கள், மருந்து, தங்குமிடப் பொருட்கள் – காஸாவுக்கு வெளியே உள்ள களஞ்சியசாலைகளில் உள்ளன. இஸ்ரேல் அரசால் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் ஜோர்டானில் 03 மாதங்கள் காத்திருக்கும் முழு மக்களுக்கும் போதுமான உணவு எங்களிடம் உள்ளது” என்று, அந்த நிறுவனம் X தளத்தில் தெரிவித்துள்ளது.

“இழக்க இனி நேரமில்லை – பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் பொருட்களை உடனடியாகக் கொண்டு வருவதற்கு, எங்களுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டும். இதனால் எங்கள் குழுக்கள் அவற்றைத் தேவைப்படும் மக்களுக்கு வழங்க முடியும். பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் மீதான தடை நீக்கப்பட வேண்டும்” எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமுலாகியிருக்கும் நிலையில், அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் சேர்வதை, இஸ்ரேல் தொடர்ந்தும் தடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.