தலைப்புச் செய்திகள்

மின்சாரக் கட்டணத்தில் மூன்று மாதங்களுக்கு மாற்றமில்லை

மின்சாரக் கட்டணத்தை இந்தக் காலாண்டில் திருத்துவதில்லை என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை இன்று (14) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் வெளியிட்டார்.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் மின்சாரக் கணக்கீட்டு முறைகள் குறித்த மறுஆய்வுக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பல்வேறு செலவுகள் காரணமாக, மின்சாரக் கட்டணத்தில் 6.8% அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென மின்சார சபை கோரியதாக சந்திரலால் இதன்போது குறிப்பிட்டார்.

“கடந்த காலங்களில், மின்சாரக் கட்டணங்கள் குறித்த முடிவுகள் 06 மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டன. இப்போது, ​​காலாண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இந்த காலாண்டிற்கு, கடந்த மூன்று காலாண்டுகளின் லாபம் அல்லது இழப்புகளின் அடிப்படையில் ஒரு சரிசெய்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், மூன்று காலாண்டுகளின் முடிவுகளை ஒரே சரிசெய்தலில் இணைப்பது பொருத்தமானதல்ல என்று ஆணைக்குழு முடிவு செய்துள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.