தலைப்புச் செய்திகள்

காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதாக கூறி 100 மில்லியன் ரூபாய் மோசடி; கல்முனையைச் சேர்ந்த 50 தொழிலதிபர்கள் ஏமாந்தனர்

‘உருமய’ தேசிய திட்டத்தின் கீழ் காணி அனுமதிப் பத்திரங்களை (freehold deeds) வழங்குவதாகக் கூறி, சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் 55 வயது ஆண் மற்றும் 43 வயது பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர்கள் 2024 ஆம் ஆண்டில் 164 வணிக உரிமையாளர்களை நிதி ரீதியாக மோசடி செய்ததற்காக, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) – சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

பக்கமுனவைச் சேர்ந்த பெண் சந்தேக நபர் ஓகஸ்ட் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதே நேரத்தில் மகரகமவைச் சேர்ந்த ஆண் சந்தேக நபர் செப்டம்பர் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக அந்தப் பெண், கல்முனையில் 164 பேரை நம்பவைத்து, பின்னர் ஒரு சட்டத்தரணியாக நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் 06 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றார் என, விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபர் கல்முனையைச் சேர்ந்த சுமார் 50 தொழிலதிபர்களை அரசியல் பற்றி விவாதிக்க சிறிகொத்தா தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய ஹோட்டல்களுக்கு வரவழைத்து, காணி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதாக உறுதியளித்து, அவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

குறித்த பெண் – மோசடியாக சம்பாதித்த 02 மில்லியனை ரூபாயை பறிமுதல் செய்ய அதிகாரிகள், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.