தலைப்புச் செய்திகள்

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (23) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, அவருக்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதியரசர் யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார்.

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்ததாக நீதிபதி கோடகொட – தீர்ப்பை வழங்கும் போது கூறினார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மின்னணு வீசா வழங்கும் செயல்முறையை, இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் பின்னர் இந்த நடவடிக்கையை நிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்ததோடு, முந்தைய வீசா வழங்கும் நடைமுறையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவை மீறி, ஹர்ஷ இலுக்பிட்டிய தடை உத்தரவைப் பின்பற்றத் தவறிவிட்டதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக தொடர்ந்து செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.