தலைப்புச் செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் கட்டளை: உரிய இடமும் குற்றப் பகுதியாக அறிவிப்பு

குற்றப் பகுதியாக அடையாளமிடப்பட்ட இடத்தில், குரல்கள் இயக்க சட்டத்தரணிகள்

– மப்றூக் –

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்று (25) கட்டளையொன்றைப் பிறப்பித்தது.

குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கடத்தி, படுகொலை செய்து புதைத்த இடத்தை மீண்டும் தோண்டக் கோருமாறு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (25) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, நீதவான் இந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்.

இன்றைய வழக்கு விசாரணைக்கு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் மற்றும் சட்டத்தரணிகள் சமூகமளித்திருந்தனர்.

பாதிக்கப்பட்டோர் சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு கட்டளையிட்ட நீதவான், குறித்த வழக்கை – சட்ட மா அதிபர் திணைக்களம் கிடப்பில் போடுவதற்குத் தீர்மானித்தமையினால், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் போவதற்கான சந்தர்ப்பம் இருந்தமையினையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் போது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் அதனை மேற்பார்வையிடுவதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் இதன்போது வழங்கியது.

இதன்பின்னர், இன்று மாலை குருக்கள்மடம் சென்ற நீதவான், அங்கு மனிதப் புதைகுழி இருக்கலாம் என, முறை்பபாட்டாளர் அடையாளம் காட்டிய இடத்தை, குற்றப் பகுதியாக அறிவித்தார். இதனையடுத்து அவ்விடம் குற்றப் பகுதியாக அடையாளமிடப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கு நாளை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.