
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை – ஓகஸ்ட் 31, 2025 க்குள் சமர்ப்பிக்கத் தவறும் எந்தவொரு நிர்வாக நிலை அரச அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2025 ஆக இருந்தபோதிலும், அதிகாரிகள் தங்கள் ஆவணங்களை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் சமர்ப்பிக்க ஜூன் 30, 2025 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இருப்பினும், ஓகஸ்ட் 31, 2025 க்குள் தேவையான அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறும் எந்தவொரு நபரும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 90இன் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இதன்படி, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளைத் தொடர்வதற்கும் மேற்படி பிரிவு – ஆணையக்குழுவுக்கு அதிகாரம் வழங்குகின்றது.
மேலும், ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சட்டத்தின் விதிகளின்படி நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேவையான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதன் மூலம் அபராதங்கள் குறைக்கப்படும்.
நிறுவனத் தலைவர்கள் இறுதி காலக்கெடுவிற்கு முன்னர் தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்தக் காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்பதற்கு நிறுவனத்தின் தலைவர் மறுத்தால், அவர்கள் ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் விசாரணைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்: • தொலைபேசி: 011-2596359 / 076-7011954, தொலைநகல்: 011-2587287, மின்னஞ்சல்: assetsciaboc@gmail.com | assets@ciaboc.gov.lk



