தலைப்புச் செய்திகள்

சுற்றுலா பயணிகளால் 3.7 பில்லியன் டொலர் 06 மாதங்களில் நாட்டுக்கு வருமானம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 110087 கோடி ரூபாய்) வருவாய், கடந்த ஆறு மாதங்களில் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் கோவிலில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் – இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள்தான் அதிகளவில் உள்ளனர் என்றும், அவர்களில் பலர் மத நோக்கங்களுக்காக வருகிறார்கள் என்றும் அவர் விவரித்தார். மேலும் கோணேஸ்வரம் கோயில் மற்றும் கதிர்காமம் போன்ற மதத் தலங்கள் அவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன என்றும் கூறினார்.

“அது எங்களுக்கு ஒரு பெரிய பலம். உங்களுக்குத் தெரியும், நாங்கள் பொருளாதார ரீதியாக திவாலானோம். அந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதுவரை, 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், கடந்த 06 மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருவாயைப் பெற்றுள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும், அந்த இலக்கை நோக்கி நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்தார்.