
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் – இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைrக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் சரித் தில்ஷான் ஏப்ரல் 29 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையின் போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சபரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட – பல தரப்பினரிடமிருந்தும் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையின் முடிவுகளின்படி, பகிடிவதை காரணமாகவே குறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
மாணவர் மனச்சோர்வு அல்லது எந்த மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அறிய முடிந்துள்ளதாகவும் சிஐடி குறிப்பிட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பகிடிவதை சம்பவங்கள் குறித்த விவரங்களை பகிரங்கமாகாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை, பகிடிவதை தொடர்பான 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சிஐடிக்கு கிடைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
ராகிங் சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன.
மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பகிடிவதை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பகிடிவதை தொடர்பான ஏதேனும் புகார்களை 1997 என்ற ஹொட்லைன் மூலம் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



