தலைப்புச் செய்திகள்

ஈரான் ஏவிய பலிஸ்டிக் ஏவுகணைகளில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ இருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

இஸ்ரேல் மீது ஈரான் இன்று (19) ஏவிய 20 பலிஸ்டிக் ஏவுகணைகளில் குறைந்தபட்சம் ஒன்றில் ‘கிளஸ்டர் குண்டுகள்’ (கொத்துக் குண்டுகள்) இருந்ததாக இஸ்ரேலிய ராணுவத்தின் ‘ஹோம் ஃப்ரண்ட்’ கட்டளையத்தை மேற்கோள் காட்டி ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தகைய கிளஸ்டர் குண்டு விழும்போது, ​​அவை உடைந்து சிறிய கொத்துக் கொத்தாக வெடிக்கும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தாக்குதலில் குண்டு ஒன்று அசோரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்தச் செய்தி கூறுகிறது.

‘சுயாதீனமாக இலக்கு வைக்கக்கூடிய மறுநடவடிக்கை வாகனங்களையும் (MIRV), பலிஸ்டிக் ஏவுகணைகளையும், அதே போல் வெடிமருந்துகளுடன் கூடிய பிற ஏவுகணைகளையும் வைத்திருப்பதாக ஈரான் கூறுகிறது. அந்த வகையில், ஒரு ஏவுகணை பல இலக்குகளைத் தாக்கக் கூடியவை” என்று ஊடகவியலாளர் ஒருவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘தரையில் காணக்கூடிய எந்த ஏவுகணையின் பாகங்களையும் நெருங்க வேண்டாம் என்றும், அவை ஆபத்தானவை – வெடிக்கக் கூடியவை எனவும் – பொதுமக்களை ராணுவம் எச்சரித்துள்ளது’ எனவும், தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.