தலைப்புச் செய்திகள்

தெஹிவளை மிருக காட்சி சாலையில் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான கிளி திருட்டு: முன்னரும் இப்படி நடந்ததாக தகவல்

தெஹிவளையில் மிருகக் காட்சி சாலையில் இருந்து 500,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நீலம் மற்றும் மஞ்சள் நிற ‘மக்கா’ (Macaw) வகை கிளியொன்று திருடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

குறித்த கிளிக் கூண்டின் கம்பி வலை வெட்டப்பட்டிருப்பதை பறவை கூண்டின் பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் கவனித்ததாகவும், பின்னர் அவர்கள் மிருகக்காட்சிசாலை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும் தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளி காணாமல் போனமையை அடுத்து, இம்மாதம் 05ஆம் திகதி – நடந்த சம்பவம் குறித்து மிருகக்காட்சிசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

திருடப்பட்ட மக்கா வகை கிளியுடன் சுமார் 29 பறவைகள் கூண்டிற்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஒரு கடையில் இருக்கும் சிசிரிவி கமராவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், திருடப்பட்ட பறவையுடன் சந்தேக நபரைக் காண முடிவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும், இதே பறவை கூண்டிலிருந்து மஞ்சள் மற்றும் நீல நிற மக்கா வகை கிளியொன்று ஓகஸ்ட் 2021 இல் திருடப்பட்டதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ரத்மலானையில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் கிளி கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சந்தன ராஜபக்ஷ, மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளைப் பாதுகாப்பதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் சேவைகளைப் பெறுவதற்கு – அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையில் இருந்து விலங்குகள் திருடப்பட்ட பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தைத் தீர்க்க போதுமான பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.