தலைப்புச் செய்திகள்

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளின் தலைவர், பிரதித் தலைவர் தெரிவுகள், ஜுன் 15க்கு பின்னரே சாத்தியம்: உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி

– எஸ் ஜே புஹாது –

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணத்தில் எந்த தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர் மற்றும் தலைவர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது சபை அமர்வுகள், பெரும்பாலும் ஜூன் 15ஆம் தேதிக்குப் பின்பு தான் நடைபெறும் என, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் தேர்வு தொடர்பான முதலாவது சபை அமர்வு பற்றிக் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் கல்முனை மாநகர சபையை தவிர்த்து ஏனைய 44 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இவற்றில் தேர்வான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இமாதம் அதாவது ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் – பதவிக்காலம் நடைமுறைக்கு வருகின்றது.

இதற்கு அமைய, 50 வீதம் அல்லது அதற்கு அதிகமாக 14 உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அவற்றில் மேயர் அல்லது தவிசாளர் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளருடன் இணைந்து, நான்கு நாட்கள் முன்னதாக அவகாசம் வைத்து – உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கொடுத்து, சுயமாக தத்தமது உள்ளூராட்சி மன்றங்களின் சபை அமர்வுகளை ஆரம்பிக்கலாம்.

அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நான்கு நாட்கள் அவகாசத்துடன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து ஜூன் 02ஆம் திகதி சபை அமர்வுகளை நடத்துவதற்கு தேவையான கால அவகாசம் இல்லை. எனவே, ஜூன் 02ஆம் திகதி இவ்வாறு 50 வீதம் அல்லது அதற்கு அதிகமான பெரும்பான்மையுள்ள தரப்பினரைக் கொண்ட சபைகளில் – முதலாவது அமர்வுகள் இடம் பெறுவது சாத்தியமற்றது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது தொங்கு நிலையில் 30 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளும் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 09 உள்ளூராட்சி சபைகளும் பெரும்பான்மை பலம் இன்றி இவ்விதம் தொங்கு நிலையில் உள்ளன.

இச்சபைகளின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் பதவி தெரிவுகள். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்ற வகையில் – எனது தலைமையில் அந்தந்த சபைகளில் இடம் பெறும். இக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர்தான் அந்தந்த சபைகளில் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.

ஏனெனில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தலைவர் மற்றும் பிரதித் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான முதலாவது சபை கூட்டம் நடைபெறும் திகதிகளைக் குறிப்பிட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படல் வேண்டும்.

அதன்படி, முதலாவது அமர்வு நடைபெறும் தினத்திற்கு 07 நாட்களுக்கு முன்னதாக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத முப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான முதலாவது அமர்வு ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரே இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன” என்றார்.

மேலும், குறைந்தது இந்த 30 ஊராட்சி சபைகளுக்கும் தலைவர் மற்றும் பிரதித் தலைவர்களைதெரிவு செய்வதற்கு 15 நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.