
லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நான்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் மீது – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் சிலோன் டுடே ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் கொழும்பு, குருநாகல், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என செய்தி தெரிவிக்கின்றது.
2015 க்குப் பிறகு தொடங்கப்பட்ட விசாரணைகள் முடிவடைந்ததை அடுத்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
லஞ்சம் தொடர்பான தவறான நடத்தைகளில் ஈடுபட்டமை, தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் – குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது அதிகார துஷ்பிரயோகம், அரசுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக சொத்து குவித்தல் தொடர்பான குற்றங்களுடன் தொடர்பானது.



