
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க – மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பகிடிவதைக்கு உள்ளான சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிரேஷ்ட பேராசிரியர் ஏ.ஏ.வை. அமரசிங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த,தெரிவித்தார்.
பேராசிரியர் கபில ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணி வை.எஸ். சந்திரசேகர ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவரின் மரணம் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, பொருத்தமான அவதானிப்புகள் மற்றும் முடிவுகளை உடனடியாக வழங்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உவேந்தர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மாணவரின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று – பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் கூட்டமைப்பு (IUSF) கோரிக்கை விடுத்தது.
இந்த மரணம் பகிடிவதை தொடர்பானது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முடிப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இறந்தவர் பகிடிவதை செய்யப்பட்டாரா என்பதைத் தீர்மானிக்கவும், அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காணவும் அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. விசாரணைக்கு உதவ பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



