
இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் – பெரும் மதிப்புள்ள ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூதுவரின் இல்லத்திலுள்ள ஒரு பெட்டகத்திலிருந்து சுமார் 4.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதித்த மோதிரங்கள், மாலைகள் மற்றும் பதக்கங்கள் உள்ளிட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் சுவிஸ் தூதுவர் நேற்று (29) கொள்ளுப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தூதுவர் இந்த மாதம் 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்து சென்று 27ஆம் திகதி இலங்கை திரும்பினார். அவர் இல்லாத நேரத்தில், ஐந்து ஊழியர்கள் வீட்டில் பணியில் இருந்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிசார் ஐந்து பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்கள் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மேல் மாடி அறையில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பொருட்களில் வைரம் பதித்த மோதிரம், மரகதம் பதித்த மோதிரம், தங்க மாலை, வெள்ளை தங்க வளையல், தங்க திருமண மோதிரம், ரூபி பதித்த தங்க மோதிரம், தங்க பதக்கம், நீலக்கல் பதித்த தங்க காதணிகள் மற்றும் ஒமேகா லேடிமேடிக் கைக்கடிகாரம் ஆகியவை அடங்கும்.



