
கண் வைத்திய நிபுணர் பரிந்துரைத்த கண்ணாடியை அணிந்து நீதிமன்ற அறைக்குள் நுழைய முயன்றபோது, பொலிஸார் தன்னை துன்புறுத்தியதாகவும், தடுத்ததாகவும் ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸேவெல, காலி நீதவான் நீதிமன்ற பதிவாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.
ஏப்ரல் 22, 2025 திகதியிட்டு அவர் வழங்கியுள்ள எழுத்து மூல முறைப்பாட்டில், வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் – பிணைதாரராக, காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாக புஸ்ஸேவெல தெரிவித்தார்.
அவருடைய முறைப்பாட்டில், நீதிமன்ற நுழைவாயிலில் நின்ற இரண்டு பொலிஸார், கண்ணாடி அணிந்த நிலையில் நீதிமன்ற அறைக்குள் நுழைய முடியாது என்று கூறி அவரைத் தடுத்ததாக தெரிவித்துள்ளார். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தனது மார்பில் கையை வைத்து, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைவதைத் தடுத்து, தனது கண்ணாடியை கழற்றுமாறு கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர், தனது இடுப்புப் பகுதியை பின்புறத்திலிருந்து பொருத்தமற்ற முறையில் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“நான் ஆஜராக வேண்டிய வழக்கை நீதவான் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஆனால் பொலிஸாரின் தடை காரணமாக, நான் நீதிமன்ற அறைக்குள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டது,” என்றும் அவரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இதனால் அவரின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸார் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், “முகத்தில் கண்ணாடி அணியாமல், கையில் கண்ணாடியுடன் மட்டுமே உள்ளே நுழைய முடியும்” என்று கூறி, நீதிமன்ற வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாகத் தள்ளியதாகவும் ஊடகவியலாளர் புஸ்ஸேவெல தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணாடி அணிவதற்கு எதிராக சட்டப்பூர்வ அல்லது நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியபோது, பொலிஸார் ஆக்ரோஷமாக பதிலளித்ததாகவும், சட்டத்தரணிகள் உட்பட பல சாட்சிகள் முன்னிலையில் தன்னை தொடர்ந்து மிரட்டியதாகவும் அவருடைய முறைப்பாட்டில் விவரித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் முன்பு தொடர்ந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கண்ணாடி அணிந்து ஆஜராகி வருவதாகவும், உயர் பாதுகாப்பு நிலைமைகளின் கீழ் கூட ஒருபோதும் இவ்வாறான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒரு பொதுமகனாகவும் ஊடகவியலாளராகவும், நான் எப்போதும் நீதித்துறையின் மீது மரியாதை வைத்துள்ளேன். சரியான ஆடைக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர்; “நான் நகைகளை அணிவதில்லை, தனிப்பட்ட லாபத்திற்காக தொழில்முறை அந்தஸ்தையும் பயன்படுத்துவதில்லை. இன்று நான் மரியாதையுடன் உடையணிந்து வந்தேன், ஆனால் நான் அவமானத்துடன் நடத்தப்பட்டேன்” எனவும், அவரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சிகிச்சை அவரது அனுபவத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், நீதிமன்றங்களுக்குச் செல்லும் சாதாரண குடிமக்களை நோக்கி இது பெரும்பாலும் இயக்கப்படுகிறது என்றும், காவல்துறையில் உள்ள சிலரால் தன்னிச்சையான நடத்தை வளர்ந்து வரும் போக்கிற்கு எதிராக எச்சரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் கசுன் புஸ்ஸேவெல தனது முறைப்பாட்டில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பதிவாளரும் தொடர்புடைய அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுபோன்ற நடத்தை “நீதித்துறையின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும், பொதுமக்களின் உரிமைகளை மீறுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.



