தலைப்புச் செய்திகள்

ருஷ்டியின் கைது தொடர்பில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தனது நிலைப்பாட்டை அறிவித்தது

எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தியமைக்காக – கைது செய்யப்படுவதை, தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

‘இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடு. குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடச்சியான வன்முறைக்கு எதிராக, உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்’ எனவும் ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைப்பு இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேலும் குறிப்பிடுகையில்;

பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் அண்மையில் ஒரு சுவர் ‘ஸ்டிக்கரை’ (சுவரொட்டி) ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது – அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.

நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக பொலிஸாரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும், கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது. அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும், தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யத்துல் உலமா – சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும், மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அண்மையில் கொழும்பில் ஒட்டியமைக்காக, ருஷ்டி எனும் 22 வயது இளைஞர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, அவர் 03 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஜே.வி.பி செய்தால் சரி; ருஷ்டி செய்தால் பிழையா?: நியாயம் கேட்கிறார் தமிழன் ஆசிரியர் சிவராஜா