தலைப்புச் செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரின் செயலாளராக பணியாற்றிய அண்ணன் மனைவிக்கு 16 வருடங்கள் சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவருடைய முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளதுள்ளது.

இதேவேளை, அவர்கள் இருவருக்கும் தலா 02 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளி எஸ்.எம். ரஞ்சித், வடமத்திய மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ​​அவரின் தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேனவின் அதிகாரப்பூர்வ வாகனத்துக்கு எரிபொருள் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடுகளைச் செய்ததாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு குற்றம் சாட்டியது. அவரது எரிபொருள் கொடுப்பனவு ஏற்கனவே அவரது சம்பளத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு மேலதிகமாக ஒதுக்கியுள்ளார்.

எஸ்.எம். ரஞ்சித் – முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரராவார். சாந்தினி சந்திரசேன – சந்திரசேனவின் மனைவியாவார்.

2012 முதல் 2014 வரை முதலமைச்சர் ரஞ்சித்தின் பதவிக் காலத்தில் அவரின் தனிப்பட்ட செயலாளராக சாந்தினி பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் வவுச்சர்கள் மூலம் 26 லட்சத்து 80 ஆயிரத்து 528 ரூபாய் மற்றும் 53 லட்சத்து 79 ஆயிரத்து 623 ரூபாய் மதிப்புள்ள எரிபொருளைப் பெற்றதாகக் கூறப்படும் சாந்தினி சந்திரசேன மீதும், லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்தது.

முதலமைச்சரின் இரண்டு உத்தியோகபூர்வ கார்கள் மற்றும் பாதுகாப்பு வாகனத்திற்கு மேலதிகமாக, மேலும் இரண்டு வாகனங்களை விடுவிக்குமாறு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக – சாந்தினி மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.