
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான – தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதை மேன்முறையீட்டு நீதிமன்றம் தொடர்ந்தும இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபை மற்றும் பல உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் செயல்முறை தொடர்பான நடவடிக்கைகளை நாளை (03) வரை நிறுத்துமாறு, தேர்தல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான மனுக்கள் இன்று (02) தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, வேட்பு மனுவுடன் ‘அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுதல்’ வேண்டும் – என்ற நிபந்தனை பூர்த்தி செய்யப்படாமை காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், அது தவிர்ந்த ஏனைய காரணங்களால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை நாளை வரை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி அமைப்புகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ‘சர்வஜன பலய’ கூட்டணி மற்றும் பல சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட தரப்புக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதுவரை கிட்டத்தட்ட 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



