
மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, அவற்றில் இரண்டுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், ஒரு குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தொடர்ந்தும் இம்மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டது.
அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதன் மூலம், அரசுக்கு 23 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் – நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மார்ச் 27ஆம் திகதியன்று வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் – அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் 27ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு – இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக பிணை வழங்கப்பட்டது. ஆயினும் ஒரு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.



