தலைப்புச் செய்திகள்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு: தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து – மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி, மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மேற்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை நாளை, ஏப்ரல் 02, 2025 வரை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

வேட்பாளர்களாலும் சுயேட்சைக் குழுக்களாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர், இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோர அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றச் சட்டத்தில் – திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்தது.

முன்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த சிலர் மரணமடைந்தமையினாலும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும், கட்சி மாறியமையினாலும் புதிய வேட்புமனுக்களை கோரும் திட்டம் முன்வைக்கப்பட்டது.