தலைப்புச் செய்திகள்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: நாமல் எம்.பி கவலை

நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்; “நாட்டின் பாதுகாப்புக்காக குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.

இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு – ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன” என்றார்.

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அதனைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும், நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்.

இதேபோல் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.

இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டுக்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் முதலீடுகளை முன்னெடுத்த முதலீட்டாளர்களும் இடைநடுவே திட்டங்களைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் எனக் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைத்த விடயங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.