தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி: தன்னை வம்பிழுத்ததால் ‘சம்பவம்’ நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் தாக்கியதாகக் கூறப்பட்டு – தலையில் காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குறித்த நபரை அர்ச்சுனா எம்.பி தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது நிகழ்ந்ததாகவும், இதனை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகராறின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் பீங்கானால் நபரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டபோது, ​​அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதலுக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தின் வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவுடன் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு தான் சென்றிருந்ததாகவும், அங்கு இரண்டு நபர்கள் தன்னை வம்பிழுத்து – தாக்க முயற்றித்ததாகவும் அப்போதுதான் ‘சம்பவம்’ நடந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி எழுதியுள்ளதை உறுதிப்படுத்துவது போல் – சம்பவம் நடந்த ஹோட்டலில் இருந்து வெளியான சிசிரிவி வீடியோ காட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்கள்