தலைப்புச் செய்திகள்

பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, மு.கா தலைவர் ஹக்கீம் முன்னிலையில் உதுமாலெப்பை எம்.பி எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் வட்டார பிரிவு தலைவர் ஒருவரை கட்சியிலிருந்து நீக்காது விட்டால், தனது பிரதி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில், அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் – நேற்று (10) சம்மாந்துறையில் – அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையேற்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கிளையின் தலைவராக பதவி வகிக்கும் – அதிபரும் ஊடகவியலாளருமான எம்.ஐ.எம். றியாஸ் என்பவரை கட்சியிலிருந்து நீக்காது போனால், தான் முஸ்லிம் காங்கிரஸில் வகிக்கும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, அங்கு உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி கூறினார்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் றியாஸ் என்பவர், மாற்று கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, அவரை கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லாவிட்டால், கட்சியில் தான் வகிக்கும் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்வேன் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் எழுந்து, இவ்விடயம் குறித்து தெளிவுபடுத்தினார். ”றியாஸ் என்பவர் உதுமாலெப்பை மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய வேட்பாளர்களுக்கும் ஆதரவாக கடந்த பொதுத் தேர்தலில் செயற்பட்டார். ஆனால், அவர் மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை” என கூறினார்.

இந்த நிலையில், குறித்த றியாஸ் அதிபரை – கட்சி நடவடிக்கைகளில் இணைத்துக் கொண்டு, தொடர்ந்தும் செயற்படுமாறு, அட்டாளைச்சேனை மத்திய குழு முக்கியஸ்தர்களிடம் ஹக்கீம் தனியாக சந்தித்தபோது கூறியதாக அறியமுடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, 20 வருடங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.

ஆயினும் 20 வருடங்களுக்குப் பின்னர் அதாஉல்லாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தேசிய காங்கிரஸிலிருந்து விலகிய உதுமாலெப்பை, மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து – தற்போது அந்தக் கட்சியின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும் அவரின் சொந்த ஊர் அட்டாளைச்சேனையிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினருக்கும் இடையில் ‘பனிப் போர்’ ஒன்று தொடர்ச்சியாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மு.கா தலவர் ஹக்கீம்