
கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரொருவர் – உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்த சம்பவமொன்று அனுராதபுரம் பகுதியில் நடந்துள்ளது.
அனுராதபுரம் புனித பகுதியில் யாத்திரிகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரே – இவ்வாறு பொலிஸ் அதிகாரியின் காதை கடித்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடமலுவ காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவிப் பொலிஸ் பரிசோதகர், ருவன்வெலிசேய பகுதியிலிருந்து ஸ்ரீ மகா போதிக்கு செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சந்தேக நபர் நீர் சேமிப்பு தொட்டியின் அருகே சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த நபரை – பொலிஸ் உதவிப் பரிசோதகர் கைது செய்ய முயன்றபோது, சந்தேக நபர் அவரின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துவிட்டார். இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் – சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அனுராதபுரம் சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்தவர் என்றும், இவர் மிரட்டல் விடுத்தமை, ஒரு பொலிஸ் அதிகாரிக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையும் பாருங்கள்



