தலைப்புச் செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு அரசு 46 லட்சம் ரூபாய் மாத வாடகை செலுத்துகிறது: ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசு வழங்கியுள்ள இல்லத்திற்கான வாடகையாக மாதத்துக்கு 46 லட்சம் ரூபாய் செலுத்தப்படுவதாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கட்டுக்குருந்தவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்றும் இதன்போது அவர் கூறினார்.

இது குறித்து ஜனாதிபதி அனுர மேலும் தெரிவிக்கையில்;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாயாகும். எனனே, முன்னாள் ஜனாதிபதிகள் வீடுகளை காலி செய்யவோ அல்லது வீட்டுக்கான வாடகையை அவர்கள் செலுத்துவதற்கோ இணங்க வேண்டும்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் ஒரு வீட்டை அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பங்கைப் பெற உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இதனை 30,000 ரூபாய் உதவித்தொகையாகக் கட்டுப்படுத்தும். இது அவர்களின் சம்பளத்தில் 1/3 பகுதியாகும்” என்றார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் – ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.