தலைப்புச் செய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த அக்கரைப்பற்று நபருக்கு விளக்க மறியல்

– றிசாத் ஏ காதர் –

ஐரோப்பிய நாடொன்றுக்கு நபரொருவரை அனுப்புவதாகக் கூறி, போலி வீசாவைக் காண்பித்து – அவரிடமிருந்து 65 லட்சம் ரூபாயினை பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயத்தில் பணத்தை பறிகொடுத்ததாக கூறப்படும் நபர்,  விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அம்பாரை அலுவலகத்தில் 2024.12.11ஆந் திகதி  முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு அமைவாக – அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை சந்தேகத்தின் பேரில் 16ஆம் திகதி கைது செய்து நேற்று (17) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். 

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, எதிர்வரும் 24ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இதனுடன் தொடர்புபட்ட மற்றொரு சந்தேக நபரும், அம்பாரை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் 2024.06.20ஆந் திகதி ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கைது நடவடிக்கையானது 2024.06.10ஆந் திகதி விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்யப்பட்ட மற்றொரு முறைப்பாட்டுக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட் சந்தேக நபர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த மோசடிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கப்படுபவர் – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும், பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று தற்போது இலண்டனில் வசித்துவருவதாகவும் விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.