
இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு போர்நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இதனை அறிவித்துள்ளன.
15 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை மத்தியஸ்தர்கள் உறுதிப்படுத்தியதையடுத்து, காஸாவிலுள்ள பலஸ்தீனியர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். இந்த போர் நிறுத்தம் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வர உள்ளது.
இதில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசா முழுவதும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது ஆகியவை அடங்கும். இஸ்ரேல் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறது, அதே நேரத்தில் ஹமாஸ் அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதி முழுவதும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலியப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் போருக்கு நிரந்தர முடிவு காணுதல் உள்ளிட்ட பாலஸ்தீனக் குழுவின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, ஹமாஸ் அதிகாரி இஸ்ஸத் அல்-ரிஷேக் கூறியுள்ளார்.
காஸாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறி வந்த நிலையில், இந்த போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால் இடம்பெயர்ந்துள்ள தங்களுக்கு – வாய்ப்புக் கிடைக்கும் போது, தங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக பல பாலஸ்தீனியர்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர்.
“போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், நான் திரும்பி வந்து வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் ஹனூனில் உள்ள எனது நிலத்தை முத்தமிடுவேன்,” என்று 2023 டிசம்பரில் தனது வீட்டின் மீது இஸ்ரேலிய குண்டு விழுந்ததில் தனது 10 குழந்தைகளில் இருவரை இழந்த 66 வயது பெண் உம் முகமது கூறியுள்ளார்.
ஒக்டோபர் 7, 2023 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திய போரில் – குறைந்தது 46,707 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 110,265 பேர் காயமடைந்துள்ளனர். அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது – இஸ்ரேலில் குறைந்தது 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போது, பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் இடம்பெயர்வு முகாம்கள் அழிவடைந்தன. காஸாவில் அனைத்து அடிப்படைக் கட்டமைப்புக்களும் நாசமடைந்துள்ளன.
இதேவேளை, பணயக்கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு உதவிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.



