தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்குரிய வரவு – செலவு அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பற்றிய விபரங்களைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் 1,042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் – தங்கள் பிரச்சாரங்களுக்கான வரவு – செலவுகளை சமர்ப்பிக்கத் தவறியதாக தேர்தல் ஆணைக்குழு – பொலிஸ் திணைக்களத்துக்கு தெரிவித்திருந்தது.

எனவே, அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு – அறிக்கைகளை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, சுயேச்சைக் குழு அல்லது வேட்பாளரின் பிரசாரங்களுக்கான வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.