தலைப்புச் செய்திகள்

22 நாட்கள் கடலில் தத்தளித்து 06 மாதங்கள் தமிழகத்தில் சிறைவாசம் அனுபவித்த மீனவர் இர்பானுக்கு முதற் கட்ட உதவி வழங்கி வைப்பு

கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், படகு இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, 22 நாட்கள் கடலில் தத்தளித்து, பின்னர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, சுமார் 06 மாதங்களின் பின்னர் – இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இர்பான் என்பவருக்கான முதற்கட்ட – உடனடிய உதவியாக, அரிசி மற்றும் உலர் உணவு பொதியினை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் இன்று (30) வழங்கி வைத்தார்.

குறித்த மீனவர் இந்தியா – தமிழகத்தில் சுமார் 06 மாதங்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில், கடந்த 20ஆம் திகதி நாடு திரும்பினார்.

இதனையடுத்து மீனவர் இர்பானுடைய நேர்காணலொன்றை ‘புதிது’ செய்தித்தளம் தனது யு-டியுப் பக்கத்தில் வெளியிட்டிருந்ததோடு, இவர் பற்றிய தகவலையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து – முதற்கட்டமாக இன்று உலர் உணவுப் பொதி மற்றும் அரிசிப் பொதி ஆகியவற்றை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் வழங்கினார்.

இதன்போது ‘புதிது’ செய்தித்தள பிரதம ஆசிரியர் யூ.எல். மப்றூக், வை.எம்.எம்.ஏ அமைப்பின் அம்பாறை மாவட்ட தலைவரும் அதிபருமான எம்.ஐ.எம். றியாஸ், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜௌபர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

இது இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட மீனவர் இர்பானுக்கு சில அமைப்புக்களினூடாகவும் உதவிகளைப் பெற்றுக் கொடுக்க ‘புதிது’ செய்தித்தளம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அட்டாளைச்சேனை கடற்கரையிலிருந்து இவ்வருடம் ஜுலை மாதம் 12ஆம் திகதி ஒருநாள் படகொன்றில் கடலுக்கு மற்றொரு நபருடன் இர்பான் மீன் பிடிக்கச் சென்றிருந்தார். ஆயினும், அவருடன் சென்ற மற்றைய மீனவர் – திக்குத் தெரியாமல் படகு தத்தளித்த 10ஆவது தினத்தன்று, கடலில் குதித்து காணாமல் போய்விட்டதாக இர்பான் தெரிவிக்கின்றார்.

தொடர்பான வீடியோ: ஆமை ரத்தம் குடித்து – சிறுநீரை பருகி, 22 நாட்கள் கடலில் தத்தளித்து, உயிர் மீண்டவரின் கதை | Puthithu