தலைப்புச் செய்திகள்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அகப்பட்ட சகோதரரின் வழக்குத் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே எடுத்துள்ள தீர்மானம்

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக – லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணைகளை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதிவாதிகளில் ஒருவரான சலோச்சன கமகே தனது சகோதரன் என்பதால், மேற்படி லஞ்ச வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தால் முன்னெடுக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு – நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

09மில்லியன் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவரையும் 2025 ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சனிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட டொரிங்டன் அவென்யூவில் உள்ள முறைப்பாட்டாளரின் உறவினரின் காணிக்கு நட்டஈட்டை துரிதமாக வழங்குவதாக உறுதியளித்து, புறக்கோட்டையில் உள்ள மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து 09 மில்லியன் ரூபாயை – மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் வர்த்தகர் ஒருவரும் இணைந்து பெற்றுக் கொண்டபோது, அவர்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தொடர்பான செய்தி: லஞ்சம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது