
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து, சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழமையாக கொடுப்பனவுகளை பெற்று வருகின்றனர் என்று, பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் – தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறினார்.
“பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர். புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்து, ருவன்வெல்லவில் உள்ள முழுப் பொலிஸாரையும் மாற்ற வேண்டியிருந்தது. அது மட்டுமன்றி அவிசாவளையிலும் மாற்றினோம். இந்த நபர்கள் ஒரு வலையமைப்பாக உள்ளனர். பாதாள உலகத்தின் பணம் பொலிஸாரின் கைகளுக்குப் பாய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தற்போதைய பாதாள உலக தலைவர் மத்துகமவில் இயங்கி வருவதாகவும் பிரதியமைச்சர் சுனில் வடகல மேலும் கூறினார்.
“நாங்கள் இதை ஒரு தீவிர பிரச்சனையாக பார்க்கிறோம். நாங்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது கடினம். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களுக்கான தங்கள் கடமையையும், அவர்களின் ஆணையினையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“நேற்றும் முந்திய நாளும் மீண்டும் பாதாள உலக சம்பவங்கள் வெளிப்பட்டன. இதில் குறுகிய சந்தர்ப்பவாத அரசியலும் உள்ளது” என பிரதி அமைச்சர் வதகல தெரிவித்துள்ளார்.



