
– முகம்மது அக்ரம் –
டெங்கு ஒழிப்பு தொடர்பில் பாடசாலை சமூகத்துக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று, அட்டாளைச்சேனை சம்புநகர் அல் – மினா வித்தியாலயத்தில் நேற்று (26) இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர் எம்.எம். ஜெசீர் பிரதம வளவாளராக கலந்து கொண்டார்.
டெங்கு நுளம்பு எவ்வாறு உருவாகின்றது, இதன் தாக்கம் என்ன, இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும், நமது பிள்ளைகளையும் குடும்பத்தையும் சமூகத்தையும் இந்த நோய்த் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் எனவும், இதன்போது வளவாளர் விளக்கமளித்தார்.
இச் செயலமர்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் மெளலவி என்.ரி. நசீர், வலயத் தலைவர் எம்.எச். அப்துல் ஹை, பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.எல்.எம். அர்சாத், சம்புநகர் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் ஏ.ஜி. ஹம்சார் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் பாடசாலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.





