
– உமர் அறபாத் –
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி – அந்தப் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோர் இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையிலும், அங்குள்ள ஊழியர்களுடன் மனிதாபிமானமற்ற முறையிலும் நிர்வாக உத்தியோகத்தர் நடந்து கொள்வதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
‘சக ஊழியர்களை அடக்குமுறைக்குட்படுத்தி, மன உளைச்சலுக் உள்ளாக்கும் ஆணவம் கொண்ட AO வை வெளியேற்று’, ‘காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இருந்து – மனநிலை குழம்பிய நிலையில் துரத்தப்பட்ட AO வை வெளியேற்று’, ‘சிற்றூழியர்களை தரக்குறைவாக நடத்தி, கேவலப்படுத்தும் குறுகிய மனப்பான்மையுள்ள AO வை வெளியேற்று’, ‘பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளரின் கள்ளக் கையொப்பமிட்ட AO வை வெளியேற்று’ என்பவை உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
குறித்த நிர்வாக உத்தியோகத்தர், அங்கு பணியுரியும் சிற்றூழியர் ஒருவரை வெற்றுக் கைகளால் மலசல கூடத்தை சுத்தப்படுத்துமாறு வற்புறுத்தியதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பிரசே செயலகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறித்த நிர்வாக உத்தியோகத்தர் காத்தான்குடியைச் சேர்ந்தவாராவர். அவர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






