தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க பிள்ளையானுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், கால அவகாசம் கோரி கடிதம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்திருந்த நிலையில், தனக்கு கால அவகாசத்தை வழங்குமாறு பிள்ளையான் கோரியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா என்பவர் வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காவே, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

பொதுத் தேர்தலில் பிள்ளையான் போட்டியிடுவதனால் – நேற்றைய இறுதி தேர்தல் பிரசார நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதாக, பிள்ளையான் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 இல் கூறியமை தொடர்பாக பிள்ளையான் விசாரிக்கப்பட உள்ளார்.

ஆசாத் மௌலானா வெளியிட்ட தகவலில், 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கை ராணுவ உளவுத்துறையினர் – ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளைச் சந்தித்ததாக மௌலானா குற்றம் சாட்டினார்.

இந்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும், அதில் தானும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.

தற்போது வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் மேற்படி தகவலை பகிர்ந்துள்ளார்.