தலைப்புச் செய்திகள்

05 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட 200 சொகுசு வாகனங்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டுக்குள் 200 சொகுசு கார்களை கடத்தி, அரசாங்கத்திற்கு 5000 மில்லியன் ரூபா வரி செலுத்தாமல், சுங்கத்தை ஏமாற்றிய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு -லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

200 வாகனங்களில் 20 வாகனங்களே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

60 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான மிட்சுபிஷி ஜீப் ஒன்றை அண்மையில் கைப்பற்றியுள்ளதாகவும், இலங்கைக்கு கடத்தப்பட்ட 200 ஜீப்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20வது ஜீப் – இந்த வாகனம் எனவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

குறித்த ஜீப்பை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், வாகனத்தின் உரிமையாளர் அதனைச் செய்யாமல் வாகனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், இதனை அண்மையில் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்ததாகவும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

மேலும், வாகன உரிமையாளருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து, அவர் வைத்திருந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை சுங்கத் துறைக்கு தவறான தகவல்களை அளித்து சொகுசு ஜீப்கள் மற்றும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் தவறான தகவல்களை உள்ளீடு செய்து, 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சாதாரண வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 200 சொகுசு வாகனங்களை கைப்பற்ற, லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், கடத்தப்பட்ட கார்களை உடனடியாகக் கைப்பற்றுவதுடன், அரசை பாரியளவில் ஏமாற்றி மோசடி செய்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இதில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.