தலைப்புச் செய்திகள்

‘மௌன காலம்’ பிரகடனம்: ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விளக்கம்

இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

13,421 வாக்குச் சாவடிகளில் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. அந்த நேரத்திலிருந்து, ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் நேரம் வரை, மௌன காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

தேர்தலுக்கு தேவையான அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது வாக்காளர்கள் வாக்காளர் அட்டை மற்றும் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச் சீட்டு அல்லது முதியோர் அடையாள அட்டை ஆகியவற்றைத் கொண்டு செல்ல வேண்டும். இவை தவிர. சமூக சேவைகள் திணைக்களம் அல்லது ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைளையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை போன்று மதகுருமார்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இவை ஏதும் இல்லாதவர்கள், கிராம சேவை அலுவலர்கள் மூலம் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

“யாராவது தங்கள் வாக்கைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் வாக்களிக்க ‘X’ குறியைப் பயன்படுத்தலாம். முந்தைய தேர்தல்களைப் போலவே, ‘எக்ஸ்’ குறியும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், வாக்கைக் குறிக்க ‘1’ என்ற எண்ணும் செல்லுபடியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஏனைய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை குறிப்பிட விரும்புவோர் தமது முதல் தெரிவை ‘1’ என்ற இலக்கத்துடனும், இரண்டாவது தெரிவை ‘2’ என்ற குறிக்கலாம். மூன்று விருப்பங்களையும் வெளிப்படுத்த, வாக்காளர்கள் ‘1’, ‘2’ மற்றும் ‘3’ ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வேறு ஏதேனும் அடையாளங்கள் செல்லாததாகக் கருதப்படும் எனவும் விபரித்தார்.