தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம், வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (22)வெளியிட்ட உச்ச நீதிமன்றம்; “வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மீறியுள்ளனர்” எனத் தெரிவிதத்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பஃப்ரல்) உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் – இந்த தீர்ப்பை வழங்கியது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9, 2023 அன்று நடத்த திட்டமிட்டது. ஆனால் பின்னர் ஏப்ரல் 25, 2023க்கு ஒத்திவைத்தது.

இருந்த போதிலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வருவதால், அரசு நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அரசாங்கம் கூறியமையினால் – தேர்தல் நடத்தப்படவில்லை.