
அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி இன்னும் 03 வாரங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தைப் தேர்தல்கள் ஆணைக்குழு பெறும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே தேர்தலுக்கான பணியாளர்கள், வாகனங்களைத் திரட்டுதல் மற்றும் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு – தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட ஆணைக்குழுவுக்கு தானாகவே அதிகாரம் கிடைக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்டு 16 நாட்களுக்குப் பிறகும் 21 நாட்களுக்கு முன்பும் வேட்புமனுக் தாக்குல் செய்யும் காலமாக அறிவிக்கும். அதன் பிறகு, வாக்குப்பதிவு நாள் நான்கு வாரங்கள் கழித்தும், ஆறு வாரங்களுக்கு முன்பும் அறிவிக்கப்படும்.
இருப்பினும், செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 வரையிலான ஒரு நாளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் தேர்தல் கடமைகளுக்காக அரச ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோருமாறு – மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, தமது அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் இடங்களை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வாக்காளர்களின் விரல் நகங்களில் அழியாத மை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த வகையான மை பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தேர்தல்கள் ஆணைக்கு இன்னும் முடிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.



