தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2019 நொவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நொவம்பரில் முடிவடைவதாக கூறினார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் – தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் மாறாது என அவர் விளக்கினார்.

சட்டத்தின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் – தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்துக்கு அமைய, நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பாகும் எனவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.