மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

🕔 January 19, 2016

Dr Hafees - MP- 075– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார்.

நாடாளுமன்ற செயலாளரிடம் இவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று கையளித்ததாகத் தெரியவருகிறது.

பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இரண்டினை, அந்தக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கியது.

இதற்கிணங்க, டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோரை மேற்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தற்காலிகமாக நியமித்தார்.

முஸ்லிம் காங்கிரசுக்குக்கு கிடைத்த மேற்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, அந்தக் கட்சி சார்பில் யார்யாரை நியமிப்பது என்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகவும், அந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காணும் வரையிலும்,  டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ், தனது பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஹபீஸ், அவருடைய பதவியை ராஜிநாமா செய்ய மாட்டார் என்றும், பதவியை வைத்துக் கொண்டு கட்சி மாறப் போகின்றார் என்றும், சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வந்த நிலையில், டொக்டர் ஹபீஸ், தன்னிடம் நம்பிக்கைப் பொறுப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட பதவியினை, மு.கா. தலைமையின் உத்தரவுக்கிணங்க ராஜிநாமாச் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ள டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரராவார்.

இது இவ்வாறிருக்க, வெற்றிடமாகியுள்ள மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, யார் நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, தற்போது எகிறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்