ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம்

🕔 January 1, 2016

Water board - AKP - 01
– மப்றூக் –

ற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தெரிவித்தார்.

புது வருடத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வும், அரசாங்க சேவை சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிராந்திய முகாமையாளர் நஸ்ருல் கரீம் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலய கணக்காளர் ஏ.எம். றசீட், பொறியியலாளர்களான ரி. விநாயகமூத்தி, ரி. தவேந்திரா, வர்த்தக அதிகாரி ஏ.எம்.ஏ. சப்றி, கணிணி முறைமை நிருவாகி எஸ்.எம். சந்திமா, சமூகவியல் உத்தியோகத்தர் பி. இஸ்ஹான், பிரதம எழுதுவினைஞர் யூ.எல். கால்தீன் மற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில், பிராந்திய முகாமையாளர் நஸ்ருல் கரீம் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“புதிய ஆண்டில் நல்ல திட்டங்களை வகுத்துக் கொள்வது நமக்கும், நமது குடும்பத்துக்கும், நாம் கடமையாற்றும் நிறுவனத்துக்கும் நல்லதாக அமையும்.

நல்லது, கெட்டது என்று இரண்டு பாதைகள்தான் உள்ளன. கெட்ட பாதையினை நாம் தெரிவு செய்வோமாயின் நாம் தனித்து விடப்படும் நிலை ஏற்படும். நல்ல – சரியான பாதையில் நாம் பயணிக்கும் போது அதிகமானோரின் உதவிகள் நமக்குக் கிடைக்கும்.

அலுவலகத்தில் ஒற்றுமைப்பட்டு உழைப்பதன் மூலமே பலமான அடைவுகளை எட்ட முடியும். தனிமைப்பட்டு அல்லது தனித்தனியாக செயற்படுகின்றவர்கள், உயரிய அடைவுகளை எட்ட முடியாது. ஒற்றுமை மூலமே வலுப்பெற முடியும்.

புதிய ஆண்டில் இன, மத மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலம், வலுவான அடைவு மட்டங்களை பெறுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.

ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

நமது கடமைகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க வேண்டும். பிரச்சினைக் கண்டு ஓடி ஒளிய முடியாது. அவ்வாறு செயற்படுகின்றவர்கள் கோழைகளாகப் பார்க்கப்படுவார்கள்.

பொருத்தமான தீர்வுகள்தான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

எனவே, இவற்றையெல்லாம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாம் நினைவுகொண்டு, எமது கடமைகளை தொடர வேண்டும்.

இன, மத பேதங்களற்ற நல்லதொரு கலாசாரத்தினை நாம் ஏற்படுத்த வேண்டும். 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தினால் ஏராளமானவர்களின் வாழ்க்கை இல்லாமல் போய்விட்டன. சரியான தீர்வுகள் எட்டப்படாமையினால்தான் யுத்தத்தினால் நமது நாடு பல இழப்புக்களை சந்திக்திக்க நேரிட்டது.

எனவே, பேதங்களை மறந்து நமது சந்ததியினரின் நல்வாழ்வுக்காக நாம் செயற்படவேண்டியுள்ளது.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபைக்கு, மேற்சொன்னவாறான உழைப்பின் மூலம் நாம் நற்பெயரினையும், உயரிய அடைவுகளையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

நமக்கென்று நோக்கமும், இலக்கும் இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் நோக்கம், இலக்கு என்பவை இருத்தல் அவசியமாகும். அவை இல்லாத குடும்ப வாழ்க்கை வெற்றியடையாது. அலுவலகக் கடமையும் இவ்வாறுதான் அமைதல் வேண்டும்.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் பெற்றுக் கொள்ளும் சிறந்த அடைவு மட்டங்களும், அவற்றினூடாகக் கிடைக்கும் வெற்றிகளும் இங்கு முகாமையாளராகக் கடமையாற்றும் எனக்கு மட்டுமானவையல்ல. இந்த அலுவலகத்தில் கடமையாற்றும் ஒவ்வொருவருக்கும் அவை சொந்தமாகும்.

அரசியல் செய்வதற்கோ, கட்சிகளை வழப்பதற்கோ நாம் இங்கு வரவில்லை. தேசிய நீர் வழங்கல் அதிகார சபைக்குச் சிறந்த உழைப்பினை வழங்கி, அதனூடாக உயர்ந்த அடைவு மட்டங்களை சபைக்குப் பெற்றுக் கொடுப்பதற்காகவே நாம் தொழிலாற்றுகின்றோம்.

மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் திருப்தியான சேவையினை வழங்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்பதை, புதிய ஆண்டின் முதல் நாளான இன்று நினைவுபடுத்திக் கொண்டு நமது கடமைகளைத் தொடர்வோம்” என்றார்.

இந் நிகழ்வில், தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரச சேவை சத்தியப் பிரமானத்தினை எடுத்துக் கொண்டனர். Water board - AKP - 10Water board - AKP - 06Water board - AKP - 08Water board - AKP - 07Water board - AKP - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்