நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம்

🕔 January 1, 2016

Hakeem - 0854
– ஜெம்சாத் இக்பால் –

முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுள்ளேன். துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது, அந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தில் 08 பில்லியன் ரூபாவினை லாபமாக வைத்து விட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலத்தில் இந்த அமைச்சிலிருந்து வெளியேற நேர்ந்தால், இதன் கீழுள்ள நிறுவனங்களை லாபமீட்டிய நிலையில் வைத்து விட்டு வெளியேறுவதற்கே ஆசைப்படுகின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் இன்று  வெள்ளிக்கிழமை 2016ஆம் ஆண்டுக்கான புதுவருட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்ட  விடயத்தினைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

“எமது திரைசேரியானது, இன்றைய காலகட்டத்தில் பண வரவை விட, செலவிலும் கடனிலும் மூழ்கியுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய குளறுபடிகளை நிவர்த்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மலர்ந்துள்ள புதிய வருடத்தில் சிறப்பாக முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த முயற்சிகளுக்கு மூலாதாரமாக கடந்த வருடம் ஆரம்பித்த 100 நாள் வேலைத்திட்டங்கள் அமைந்தன. இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த சற்று அதிக கால எல்லை தேவைப்பட்டது. ஆயினும், 19 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம், முதன் முறையாக இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்த ஒரு ஜனாதிபதி, தன்னுடைய சுய விருப்பத்திற்கிணங்க தான் வகித்த அதிகாரங்களை குறைத்துகொண்டார்.

இதன் காரணமாக, நாடாளுமன்றத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.

நல்லாட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை,  நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்தப் புது வருடத்தில் அவ்வாறான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

அரசியல் யாப்பினில் நிறைவேற்ற வேண்டிய ஏனைய திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு, முழு நாடாளுமன்றத்தையும் அரசியல் யாப்பு சபையாக மாற்றி அதனூடாக இந்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படும்.

புதிய தேர்தல் முறைமை இவ்வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு,  நிறைவேற்று ஜனாதிபதி முறையும் இல்லாமல் ஒழிக்கப்படுகின்ற புதிய யாப்பு திருத்தமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கு நாங்கள் எல்லோரும் கட்சிகளுக்கு மத்தியில் சமாந்தரமான பேச்சுவார்த்தைகளை நடத்திகொண்டிருக்கின்றோம்.

இந்நாடு பல வருட காலமாக அனுபவித்த கஷ்டங்கள், துயரங்கள் அகன்று கடந்த ஒரு வருட காலத்திற்குள் புதியதொரு அரசியல் கலாசாரம் மலர்ந்துள்ளது.

நிம்மதியோடு சமாதானமாக வாழ்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. இனங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இழந்த இடங்களை மீட்டுக்கொள்வதற்கு மாத்திரமல்லாமல், இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடைமொழியோடு இருந்தவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமைக்கு நாடு முழுமையாக மாறியுள்ளது” என்றார்.Hakeem - 0855Hakeem - 0856

Comments

புதிது பேஸ்புக் பக்கம்