ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள்

🕔 February 28, 2022
நுழைவாயில் மினாரா – உடைக்கப்படட நிலையில்…

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –

ர­லாற்று புகழ்­மிக்க கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் வளாகத்தில் அமை­யப்­பெற்­றி­ருந்த நுழை­வாயில் மினாராக்­களை தாங்­கி­யி­ருந்த கட்­ட­மைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனந்தெ­ரி­யா­தோரால் அகற்றப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இப் பள்ளிவாயலை நோக்கி இனவாதிகளின் பார்வை உள்ளமை யாவரும் அறிந்ததே.

அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றிருந்த பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய; கூரகலவின் பாதுகாப்பு தொடர்பிலும் உரையாற்றியிருந்தார். அதே போன்று கடந்த 22.01.2022ம் திகதி நடைபெற்ற பௌத்த ஆலோசனை சபையின் (Buddist Advisory Council) 12வது கூட்டத்தில், கூரகல விடயத்தில்ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராட்டது.

இவ்வாறு முக்கிய மட்டங்களில் இவ் விடயம் பகிரங்கமாக பேசப்பட்ட பின்னரே, குறித்த நுழைவாயில் தகர்ப்பு நடந்தேறியுள்ளது.

இவ் விடயத்தை சமூக ஊடகங்களில் கண்டித்து, எதனையும் சாதிக்க முடியாது என்பது இதன் பின்னால் உள்ள அரசியல் பலத்தை ஊகிக்கும் ஒருவரால் அறிந்துகொள்ள முடியும். இதனை எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கை வாயிலாக கண்டித்ததை கூட காணக் கிடைக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான மு.கா மற்றும் அ.இ.ம.கா கட்சிகள் இதனை ஒரு பொருட்டாக கணக்கில் கொண்டதாகக் கூட தெரியவில்லை.

ஊடகவியலாளர் சமுதித தாக்கப்பட்டதை மனோ கணேசன் உட்பட சில அரசியல்வாதிகளோடு பார்வையிடச் சென்ற மு.காவின் தலைவர் இவ் இடம் செல்லாதது ஏன்? 20ஐ ஆதரித்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரோடு தான் உள்ளார்களா? இவர்கள், சாணக்கியன் எம்.பி ஏதும் தவறு செய்திருந்தால், மறு கணமே ஊடகவியலாளர் மாநாடு நடத்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இப் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் சார்பானவர்களினுடையது என்பதால் இதனை முஸ்லிம்களில் பலர் பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை.

மேற்படி சம்பவம் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். எமக்குள் உள்ள மார்க்க பிரச்சினை வேறு, இது வேறு. ஞானசார தேரரை வைத்து ஏகத்துவ வாதிகளை அழிக்கும் பல கைங்கரியங்களை சுன்னத் ஜமாதை சேர்ந்த சிலர் செய்திருந்தனர். அண்மையில் கூட ஞானசாரவை கூட்டி வந்து சில நிகழ்வுகளையும் நடத்தியிருந்தனர். அவர் எங்களது எதிரியல்ல என்பது போலவே அவர்களது வாதங்கள் இருந்தன. அவ்வாறானவர்கள் குறித்த விடயத்தை வைத்து, தங்களது பிழைகளை உணர்ந்துகொள்ள வேண்டும்.

தற்போது ஜெய்லானி பள்ளிவாயலின் நுழைவாயில் மாத்திரமே உடைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நுழைவாயிலை உடைத்தவர்களுக்கு பள்ளிவாயலை பூரணமாக உடைப்பது பெரிய வேலையல்ல. அவர்கள் அதனை செய்யாதது, எமது எதிர்ப்பை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை தொடரும் சிந்தனையில் இருக்கலாம். நாம் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டாது, படுத்துறங்கினால், அதனை அவர்கள் – பள்ளிவாசல் உடைத்து தரைமட்டமாக்குவதற்கான சம்மதமாக எடுத்துக்கொள்வார்கள்.

இந்த பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுவது வெளிப்புடையானது. ஜனாதிபதி அநுராதபுரத்தில் பேசிய போது கூரகல தவிர்ந்து முகுதுமஹா விஹாரை மற்றும் தீகவாபியையும் சுட்டிக்காட்டியிருந்தார். கூரகல பள்ளிவாசல் விவகாரம் முடிந்தவுடன், அவர்களது இலக்கு ஏனைய இரண்டை நோக்கி வேகமாக நகரும்.

நாம் இவ் விடயத்தில் எமது எதிர்ப்பை பலமாக வெளிக்காட்டினால், அவர்களை இப் பிரச்சினைகுள்ளேயே முடக்க இயலும். ஏனையவற்றை நோக்கி அவர்கள் நகரும் காலத்தையாவாது பிற்போடச் செய்யலாம். நாம் எதிர்ப்பை வெளிக்காட்டாது அமைதியானால் யாவற்றையும் இழக்க நேரிடும்.

இலங்கை அரசு பெரும் பொருளாதார சிக்கலில் அகப்பட்டுள்ளது. தற்போது ஜெனீவாவையும் மாநாட்டினையும் எதிர்கொள்ள உள்ளது. இந் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க ஒரு போதும் விரும்பாது. சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தியே ஆயிரமாயிரம் விடயங்களைச் சாதிக்க முடியும். இதனை கூட சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலையிலேயே எமது முஸ்லிம் சமூகம் உள்ளமை கவலையானது.

கொரோனா ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது இலங்கை முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தன. அந் நேரத்திலேயே பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை வந்திருந்தார். கொரோனா நல்லடக்கம் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் தாக்கம் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.

சில விடயங்களை எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும் என்றால், அச் சந்தர்ப்பத்தில் ஜனநாயக முறையிலான எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்க கூடாது.

இலங்கை எமது நாடு. அதில் எமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது ஜனநாயக முறையிலான எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்க கூடாது. அமைதியாக இருப்பது அவர்களுக்கான அங்கீகாரமக அமைந்துவிடும்.

உடைக்கப்படுவதற்கு முன்னர் மினாரா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்