சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

🕔 February 25, 2022

– பாறுக் ஷிஹான் –

ம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.

நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே இடத்தில் கூடி நிற்றதோடு, அவை கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்குகள் பாதுகாப்புத் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து அங்கு வந்த வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது யானைக்கூட்டத்தை பார்வையிட சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்றமையினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை முடிந்துள்ள நிலையில் அப்பகுதியில் கொட்டப்படும்  குப்பைகளை உண்பதற்காக 100க்கும் மேற்பட்ட யானைகள் தினந்தோறும் வருகின்றன.

இதன்போது அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கு யானைகள் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டுக்குள் விரட்ட, அவ்விடத்துக்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை யானைகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு – யானை வேலிகள் அமைத்தல் மற்றும் அகழிகளை வெட்டுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு, காடுகளை மீண்டும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை, வனவளங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்