முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

🕔 February 5, 2022

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

03 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய காணி, இவ்வாறு மயான பூமிக்காக வழங்கப்பட்டுள்ளதாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த மயான பூமிக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த காணி, மயான பூமியாக கடந்த 02ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரின் ஆலோசனையின் பேரில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சேகு இஸ்மாயில் முஹம்மட் றியாஸ் மற்றும் முஸ்லிம் தனவந்தர்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த மயான பூமிக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மயான பூமியை பிரகடனப்படுத்தும் நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினி , நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை, நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடைலான புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வினை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்