தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

🕔 January 6, 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார்.

தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவும் அவர் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் ஆசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பாக, அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2021 மார்ச் மாதம் குற்றுப் புலனாய்வு திணைக்கத்தினர் கைது செய்தனர்.

அன்றிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவரை, டிசம்பர் 2021 இல், கொழும்பு மேல் நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இன்று (06) சென்று முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாலி; தம்மை கைது செய்தமை தொடர்பில் அமைச்சர் வீரசேகரவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

சரத் வீரசேகர, சில வர்த்தகர்களுடன் கூட்டுச் சேர்ந்து இவ்வாறு நடந்துகொண்டதாக இதன்போது கூறிய அவர்; தான் கைது செய்யப்படுவதற்கு முன்னரும் அன்றைய தினத்திலும் அமைச்சரின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளைக் கண்டறிவதன் மூலம் ஆதாரங்களைப் பெற முடியும் எனவும் கூறினார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் பேரில் பொலிஸார் செயல்பட்டதாகவும், தனது பேச்சை இரண்டு ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாகவும் கூறிய ஆசாத் சாலி; அந்த இரண்டு ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments