வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி

🕔 July 14, 2021

ந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வருடத்தில் 300 நாட்களை தூங்கி கழிக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வசிக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயதுடைய புர்காராம் என்பவரே இவ்வாறு வருடத்தின் 300 நாட்களைத் தூங்கிக் கழிக்கின்றார். 

பலசரக்குக் கடையை நடத்திவரும் இவருக்கு இவ்வாறு தூங்கும் பழக்கம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு நாள், இரண்டு நாள்கள், பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது தூங்கும் பழக்கம், ஒரு மாதத்துக்கு 25 நாள்கள் எனத் தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றிருக்கிறது.

இதனால், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே தன்னுடைய பலசரக்குக் கடையைத் திறக்கும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டார்.

புர்காராமின் விநோதமான இந்தப் பழக்கத்தினால் அதிச்சியடைந்த அவரின் மனைவி, புர்காராமை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா’ எனும் வினோத நோயால் புர்காராம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

‘ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா’ என்பது ஒருவகை தூக்க நோய் ஆகும்.  தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும், அவர்களின் உடல் ஒத்துழைக்காது. மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாக, கடும் தலைவலியால் அவதிக்குள்ளாவர். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த வினோத நோயால் புர்காராம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சாப்பிடுவதற்குக் கூட மறந்து தூங்கும் கணவருக்கு, அவருடைய மனைவிதான் தூக்கத்திலேயே உணவு ஊட்டுகிறார்.

இந்த நிலையில் அவரின் குடும்பத்தினரும் பலசரக்குக் கடையைத் திறக்க முடியாமல், வருமானத்துக்கு வழியின்றி திணறி வருகின்றனர்.

சாதாரணமாக மனிதர்கள் நாளொன்றுக்கு 07 மணித்தியாலங்கள் தூங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன்படி வருடமொன்றில் மொத்தமாக சுமார் 106 நாட்களே (2555 மணித்தியாலங்கள்) தூங்குகின்றனர்.

ஆனால் ராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் எனும் பாத்திரம், வருடத்தின் 06 மாதங்கள் தூங்கியும், மற்றைய 06 மாதங்கள் விழித்தும் இருந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில், கும்பகர்ணனையே புர்காராம் விஞ்சி விட்டார் என ஊடங்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்